சென்னை: நகைக்கடையில் ஊழியரின் கவனத்தை திசைத் திருப்பி கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வளையல் பிரிவுக்குச் சென்று அங்கு பணியில் இருந்த தபு என்ற ஊழியரிடம் வளையல்களைக் காட்டும்படி கேட்டார். அனைத்தையும் வரிசையாக பார்த்த அந்த பெண், வளையல் பிடிக்கவில்லை என அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிசிடிவியில் சிக்கிய இளம்பெண்:
இதனையடுத்து சில மணி நேரம் கழித்து வளையல் பிரிவில் சரிபார்க்கும்போது ஒரு ஜோடி வளையல், ஒரு சவரன் மதிப்பிலான வளையல் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கடையின் மேலாளர் சிஜு ஜோசப் என்பவர் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது தனியாக வந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இளம்பெண் கைது:
இதனையடுத்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளுடன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இதேபோன்று நகைக்கடைகளில் கவனத்தை திசை திருப்பி திருடும் பெண்கள் குறித்த பழைய ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நிஷாந்தினி என்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஏற்கனவே மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து அவரிடமிருந்து திருடப்பட்ட ஒரு சவரன் மதிப்பிலான வலையலை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நிஷாந்தினியை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தீரன் பட பாணியில் அரசு ஊழியர் வீட்டில் நகைக்கொள்ளை!