சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) காலை கேரளாவில் இருந்து சென்னை வந்தார். இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது திமுக மற்றும் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “சென்னையில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் மற்றொரு மாநில அரசு கவிழ்ந்தது மற்றும் சிவசேனாவின் கிளர்ச்சிப் பிரிவுக்கு பாஜக ஆதரவளிக்கப் போகிறது. இந்த ஆட்சி நீடிக்காது என்று தெரிந்தும் பாஜக தலைவர் முதலமைச்சராக விரும்பவில்லை. எனவே அவர்கள் தங்கள் பலிகடாவை கண்டுபிடித்தனர். மத்தியில் ஆளும் கட்சிக்கு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மீது எந்த மரியாதையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறி, வெட்கமின்றி செய்கிறார்கள். ஆளுநர்கள் இந்திய ஜனாதிபதியின் முகவராக இருக்க வேண்டும். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் ஆளுநர்களின் நடத்தையையும், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடம் அவர்கள் எப்படி தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம.
மகாராஷ்டிர பாஜக தலைவர் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து இந்துத்துவா பற்றி பேசி கொண்டு இருந்தார். அரசியல் சாசனத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைத்து இந்துத்துவாவை நம்பாத எந்த அரசும் இந்தியாவில் பாதுகாப்பானது அல்ல” என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிர முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே: இன்று மாலை பதவியேற்பு!