சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன் புத்தகமாக எழுதி உள்ளார். சிவாஜி கணேசன் என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் நடைபெற்றது.
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியானாலும், எழுத்தாளர் - முனைவர் மருது மோகன் அவரைப் பற்றி ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரத்து 600 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை இசைஞானி இளையராஜா வெளியிட்டார். புத்தகத்தின் முதல் மூன்று பிரதிகளை நடிகர் சிவாஜி கணேசனின் வாரிசுகளான ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, "நான் ஒரு சிறுவனாக இங்கு பேசுகிறேன். தங்கப் பதக்கம் படம் போடிநாயக்கனூரில் ரிலீஸ் ஆனது. அப்போது சிவாஜி அங்கு வந்திருந்தார். பண்ணைபுரத்திற்கும் வந்து மக்களை சந்திப்பதாக தகவல் கிடைத்தது. அவரும் வந்தார், அப்போது நாங்கள் எல்லாம் சிறுபிள்ளைகள்.
அப்படிப் பார்த்த எங்கள் அண்ணன் சிவாஜி கணேசன், எனது ஸ்டுடியோவில் வரும்போது, ராசா நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். என்னண்ணா இப்படி சொல்றீங்க என்று எனக்கு ஒருமாதிரி ஆகி விட்டது. ஒருநாள் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை உட்கார வைத்து அவர் பற்றிப்பேச வேண்டும் என்பது எனது ஆசை.
சிவாஜியிடம் இருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியதில் ஒன்று, நேரம் தவறாமை. அவருடன் இருந்து பேசுவதற்கும், உறவாடுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 1965ஆம் ஆண்டு வெளியான சாந்தி படத்தில் வரும் யார் அந்த நிலவு பாடலில் சிகரெட் குறைந்து கொண்டே வரும். ஆனால், ஒருமுறை கூட அவர் சிகரெட் பிடிக்கவில்லை.
எவ்வளவு பெரிய நடிகர்கள் இருந்தாலும் சிவாஜிக்கு இணை இல்லை. அவர் நடித்த சீனில் நானும் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதை தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இன்னும் சிவாஜியைப் பற்றி பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்’ என்று இளையராஜா தெரிவித்தார்.
தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசியதாவது, "சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று வசூலிக்கும் போது, என்னிடம் நிதிக்காக வந்தனர். குதிரையில் சிவாஜி இருப்பது போன்ற வெள்ளி சிலையை அவருக்குப் பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த பரிசில் யார் பெயரும் வரக்கூடாது என்பதற்காக பணம் முழுவதையும் தான் கொடுத்து விடுகிறேன் என கூறினேன். மேலும் சிவாஜி கணேசனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை அரசும், உலகமும் செய்யத் தவறிவிட்டது’ எனக் கூறினார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் கூறியதாவது, "பாசமலர் படத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுததாகவும், சில படங்களில் போஸ்டரை பார்த்தாலே, அழுது விடுவோமோ என்று பயம் வந்ததுண்டு.
’தாவணி கனவுகள்’ படத்தில் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியதாகவும், அவர் நடிப்பாரா என்று சந்தேகத்துடன் அவரை அணுகி கதை சொன்ன போது, சிவாஜி கணேசன் ஓகே சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் படத்தில், சிவாஜி கணேசனுக்கான ஓப்பனிங் சீன் எப்படி வைப்பது பற்றி எல்லாம் மிக யோசித்திருக்கிறேன்.
பாடல்களுக்கு உதட்டசைவு கொடுப்பதில் சிவாஜி கணேசன் மாதிரி யாரும் கிடையாது. சங்கீதத்தில் ஸ்வரங்களுக்கு வாய்ஸ் கொடுப்பது எளிதான காரியம். பெரிய வசதிகள் இல்லாத நேரத்தில் அதற்கும் சரியாக வாய்ஸ் கொடுத்தவர் சிவாஜி கணேசன்.
வில்லனாக நடித்து சிவாஜி கணேசன் அனைவரையும் கவர்ந்து விட்டார். அவரிடம் இருந்து வந்த பாதிப்புதான் சத்யராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர்’ என்று கூறினார்.
தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, "என் இனிய தமிழ் மக்களே என்று எனக்கு வசனம் கற்றுத்தந்தவரே சிவாஜி கணேசன் தான். 1952ஆம் ஆண்டில் வெளியாகும் படங்களில் தமிழை சரியாக உச்சரித்து பேசியவர், சிவாஜி கணேசன் தான். மேலும் அவர் இல்லை என்றால் இந்த தமிழை இப்படித் தான் பேச வேண்டும் என்று தெரியாமல் போயிருக்கும். சிவாஜி கணேசனின் குடும்ப ஒற்றுமைக்கு நிகர் எதுவும் இல்லை.
சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் முறையாக மரியாதை செய்யவில்லை. அவர் இந்த நாட்டின் பொதுச்சொத்து, அவருக்கு பத்மஶ்ரீ பட்டம் கொடுக்கப்படவில்லை. 10 ஜென்மங்கள் அடுத்து இருந்தாலும் சினிமா கலைஞனாக பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை’’ என பாரதிராஜா கூறினார்.
சத்துணவு திட்டத்துக்கு முதல்முதலில் நேருவை சந்தித்து 1 லட்ச ரூபாய் பணம் கொடுத்தவர், சிவாஜி கணேசன். ராணி எலிசபெத் இந்தியா வந்தபோது பார்க்கக்கூடியவர்கள் பட்டியலில் சிவாஜி கணேசனின் பெயரும் இருந்தது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி