சென்னை: சென்னையைச் சேர்ந்த கார்த்திகா யாழினி (வயது 40) மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுதா (வயது 39) மற்றும் சத்திய பிரியா (வயது 39) இவர்கள் மூன்று பேறும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் நெருங்கிய நண்பர்களான நிலையில், மூன்று பேரும் சேர்ந்து குறைந்த முதலீடு செய்து தொழில் தொடங்கலாம் என்று எண்ணி உடனே தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை சின்ன தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகை எடுத்து 2011ஆம் ஆண்டு எஸ்.கே.எஸ். பயோ அனலிட்டிகல் ஆப் சிஸ்டம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
நிறுவனத்தில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில், சமமாகப் பங்கு என ஒப்பந்தம் செய்து நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கார்த்திகா யாழினி திடீரென ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்று அங்கேயே இருந்து பணியாற்றி வந்துள்ளார்.
சுதா மற்றும் சத்திய பிரியா இருவரும் சேர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், அதில் வரும் லாபத்தில் சில மாதங்களாகச் சரியாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று பேரின் கடின உழைப்பால் அதிக லாபம் வர ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி மருந்துகள் தயாரிக்கும் இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் வாங்கி விற்பனை செய்ததால் கரோனா காலத்தில் அனைத்து தொழிலும் முடங்கிய நிலையில் மருத்துவ சம்பந்தமான தொழில் என்பதால் அதில் நல்ல வருமானத்தை ஈட்டி உள்ளார்கள்.
கார்த்திகா யாழினி ஹைதராபாத்திலிருந்ததால் சுதா மற்றும் சத்திய பிரியா ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்தில் வரும் அதிக லாபம் வருவதைப் பார்த்ததும் கார்த்திகா யாழினிக்குப் பொய்யான கணக்குகள் காட்டத் தொடங்கினர்.
லாபம் குறித்து கார்த்திகா யாழினி தனது தோழிகளான சத்திய பிரியா, சுதா இருவரிடமும் கேட்ட போதெல்லாம் நிறுவனம் நஷ்டத்தில் போவதாகக் கூறி வந்துள்ளார்கள். இருவரும் தன்னை ஏமாற்றுவதை அறிந்த கார்த்திகா யாழினி விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
குறிப்பாக கார்த்திகா யாழினிக்குத் தெரியாமல் அவரது கையொப்பத்தைப் போட்டு வேறு வங்கியில் நிறுவனம் பெயரில் கணக்கு ஆரம்பித்து. அதில், நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை மாற்றி லாபம் அடைந்துள்ளனர். மூன்று வருடத்தில் ரூபாய் மூன்று கோடியே அறுபது லட்சத்து வரை மோசடி செய்து தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்திலிருந்து விமான மூலம் சென்னைக்கு வந்த கார்த்திகா யாழினி நிறுவனத்துக்குச் சென்ற போது நிறுவனம் மூடப்பட்டு சேலையூர் பகுதிக்கு மாற்றப்பட்டது கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே இருவரின் வீட்டுக்குச் சென்று பணம் குறித்துக் கேட்டபோது பணம் எல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து கார்த்திகா யாழினி பணம் மோசடி குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சுதா மற்றும் சத்திய பிரியா இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நிறுவனத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ஆடம்பர வாழ்க்கை பல இடங்களில் நிலம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முன் விரோதம் காரணமாக கூலி தொழிலாளி அடித்து கொலை.. தந்தை மகன் கைது!