சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (பிப். 6) சாா்ஜா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பயணச்சீட்டு, ஆவணங்களை மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்கள் பரிசோதித்து விமான நிலையத்தின் உள் அனுப்பி வைத்தனா்.
அப்போது ஆந்திரா மாநிலம் நெல்லூரை சோ்ந்த நவாஸ் சேக் (25), அவருடைய மனைவி சனா (23) ஆகியோர் ஒரே PNR எண்ணில் இரண்டு பயணிகளுக்கான இ-டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனா். அதோடு பாதுகாப்பு சோதனை பகுதிக்குள்ளும் இருவரும் ஒன்றாக அதே இ-டிக்கெட்டை காட்டிச்சென்றனா்.
கணவருடன் விமானநிலையத்தில் இருக்க போலி டிக்கெட் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பு இளம் பெண் சனா மட்டுமே தனியாக வெளியே வர வந்தாா். கேட்டில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தனா். அப்போது சனா, தான் பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும், அவரது கணவா் மட்டுமே பயணம் செய்கிறார் என்றும் கூறினாா். அதோடு உள்ளே போகும் போது கேட்டில் காட்டிவிட்டு சென்ற இ-டிக்கெட்டையும் காட்டினாா். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணி அப்லோடு செய்யப்பட்டதற்கான எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், இளம் பெண்ணை வெளியே விடாமல் நிறுத்திவைத்து தீவிர விசாரணை நடத்தினா்.அப்போது இளம் பெண் கூறியதாவது, "நாங்கள் சமீபத்தில் திருமணமான இளம் தம்பதி. எனது கணவா் வேலைக்காக சாா்ஜா செல்கிறாா். அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்னை விமான நிலையம் வந்தேன். விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. எனவே நாங்கள் எனது கணவரின் உண்மையான டிக்கெட்டை கலா் ஜெராக்ஸ் எடுத்து, அந்த ஜெராக்ஸ் டிக்கெட்டில் எனது பெயரையும் இணைத்து போலியான இ-டிக்கெட் தயாா் செய்து கொண்டு வந்திருந்தோம்.
அந்த போலி இ-டிக்கெட்டை காட்டிதான் விமானநிலையத்திற்குள் பாதுகாப்பு சோதணை நடக்கும் பகுதி வரை ஒன்றாகவே சென்றோம். அதன்பின்பு நானும் கணவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமா்ந்திருந்தோம். பின்பு அவா் தனது உண்மையான டிக்கெட் மூலம் விமானத்தில் சாா்ஜாவிற்கு புறப்பட்டு சென்றாா். நான் அதே போலி இ- டிக்கெட் மூலம் வெளியே வந்தேன். நான் செய்தது தவறு தான். மன்னித்து விட்டுவிடுங்கள்" என்று அழுது கெஞ்சினாா்.
அதனை ஏற்காத மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், அப்பெண்ணை கைது செய்து, சென்னை விமானநிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். ஆந்திரா இளம் தம்பதி கலா் ஜெராக்ஸ், போலி இ- டிக்கெட்டை எந்த இண்டா்நெட் சென்டரில் எடுத்தனா், இவா்கள் இதற்கு முன்பு இதைப்போல் போலி டிக்கெட் தயாரித்துள்ளனரா, இச்சம்பவத்தோடு வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனா்.
இதையும் படிங்க... மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டிய மின்சார வாரிய ஊழியர் கைது!