கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அமித்ஷா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் அளித்த பேட்டி குறித்து பேசினார். அப்போது இதற்கு முன்பு தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக எனவும், மூப்பனார் பிரதமர் ஆவதை திமுக ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பட்டியல் இனத்தவரை திமுக துணை முதலமைச்சராகுமா?: மேட்டூரில் குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை திறக்க காரணம் மோடி தான் என்றார். வேளாண் பட்ஜெட்டை முதன்முதலில் கொண்டு வந்ததும் பாஜகதான். எல்.முருகன், தமிழிசை ஆகியோரை பாஜக பிரதமராக்கலாம் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கின்றார். சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், பட்டியல் இனத்தை சேர்ந்த எல்.முருகனை பாஜக மத்திய அமைச்சராக்கியது. மேலும் பட்டியல் இனத்தவரை தமிழ்நாடு துணை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றார்.
தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் இல்லாதது உண்மையே: 9 ஆண்டு காலமாக தமிழ்நாட்டிற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என சொல்லி வரும் நிலையில், இவ்வாறு தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் இல்லை என்று முதலமைச்சரும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படாதது உண்மைதான் எனவும், சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டீர்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்தார்.
9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியல்: டிபன்ஸ் காரிடார் (Defense Corridor) என்ற சிறப்பு திட்டம் தமிழகம், உ.பி ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கபட்டது எனவும், பா.ஜ.க கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்தார். 9 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பதை தினமும் பட்டியலிட்டு சொல்லி கொண்டு இருக்கின்றோம். அது உங்களுக்கு புரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்கள் பிரதமர் ஆக வேண்டும்: மேலும் பேசிய அவர், ரஃபேல் ஊழல் விவகாரம் (Rafale Scam) நீதிமன்றத்தால் முடித்து வைக்கபட்டது என தெரிவித்த அவர், தமிழர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய தலைமைகளாக உருவாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்ததில் தான் அமித்ஷா, தமிழர் பிரதமாக வேண்டும் என்பதை சொல்லி இருக்கின்றார் என கூறினார்.
அத்தோடு, மோடி பிரதமர் இல்லை என அமித்ஷா சொல்லவில்லை எனவும், ராஜாஜி, காமராஜ், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம் போல தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் சூழல் இல்லை என்பதையே அமித்ஷா குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றார் எனவும், மோடி பிரதமர் இல்லை என்று சொல்வது அபத்தமானது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊருக்குள் தத்தளிக்கும் பார்வையற்ற 'பாகுபலி யானை'-யை மீட்டு வனப்பகுதிக்குள் விட கோரிக்கை