ஆவடி தொகுதிக்குள்பட்ட வசந்தம் நகர் பகுதியில் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணிகளை ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் இன்று நேரில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் தொடர்ந்து நடைபெறவுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, நடைபெறாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் உள்ள தாமரை குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடைபாதை அமைக்கும் வேலைகளை ஆய்வுமேற்கொண்டு பணிகள் நிறைவுசெய்ய அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், "தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது உண்மைதான். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பது மக்களின் நலனுக்காகத்தான், தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் என்பது இல்லை.
முதலமைச்சரை, அமைச்சர்கள் சந்திப்பது இயல்புதான். அதனால்தான் தினமும் சந்தித்துவருகின்றனர். நான் தொகுதியில் இருந்ததால் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் சந்திப்புப் பற்றி தெரியவில்லை. எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரூ.3 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா பறிமுதல்