சென்னை: அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று (நவ.9) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது, வெள்ளம் வடியும் வகையில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறிய நீதிபதிகள், பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் இறப்பதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த மழை, வெள்ளம் அலுவலர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. கோரிக்கை தொடர்பாக மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதுடன், அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
முன்னதாக, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்