தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் நகராட்சி, 8.36 சதுர கி.மீ பரப்பளவுடன் 33 வார்டுகளை உள்ளடக்கிய மூன்றாம்நிலை நகராட்சியாக 1919ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, 1988ஆம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது, 33.13 சதுர கி.மீ. பரப்பளவுடன் 42 வார்டுகளைக் கொண்டு விழுப்புரம் நகராட்சி செயல்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோருக்கு விழுப்புரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஒரு முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. இந்த நகராட்சியின் ஆண்டு வருமானமான 28.68 கோடி ரூபாயினைக் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நூற்றாண்டு கண்டு சரித்திரம் படைத்துள்ள விழுப்புரம் நகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி, பாதாள சாக்கடை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், குளங்கள், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி சேவை மையங்கள் போன்றவைகளை மேம்படுத்திட ரூ.50கோடி நிதி வழங்கப்படும் என்றார்.