மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மகன் குமார் (46). இவர், திருச்சி மாவட்டம் சிறுகமணி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பு பணிக்கான சிறப்பு முகாமில் பொறுப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
மன்னார்புரம் மின் அலுவலகம் அருகே வந்தபோது, மருங்காபுரியில் இருந்து பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு வேன் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரான மருங்காபுரி தேனூர் பகுதியைச் சேர்ந்த சேகர்(20) என்பவரை கைது செய்தனர். கரோனா பணியின்போது கிராம நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள், அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பின்போது சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’