நடிகை விஜயலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் சமீப காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் விஜயலட்சுமியை தகாத முறையில் பேசி வந்தனர். மேலும், ஹரி நாடார் என்பவர் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் அவரை மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் மயக்கநிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து அவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எல்லோரும் காப்பாற்றியிருக்கிறார்கள், நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் எல்லோருடைய அன்பும்தான் நேற்று(ஜூலை 26) ஏதோ ஒரு ரூபத்தில் வந்து என்னைக் காப்பாற்றி இருக்கிறது. வாழவே வேண்டாம் என சாகப்போகும் ஒரு நபரைக் கூட எப்படி அசிங்கப்படுத்தி, சீமான் போன்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரியவில்லை.
என்னுடைய நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்பப்படுகிறேன். நேற்று(ஜூலை 26) மிகவும் சீரியஸாக வாழப் பிடிக்கவில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். என்னை பாஜக கைக்கூலி என்று கூறுகிறார்கள். இப்படிக் கூறுவதை முதலில் நிறுத்துங்கள். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
உலகத்தின் பல இடங்களிலிருந்து என்னை விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. நான் மிகவும் உடல்நலம் இயலாமல் இருக்கிறேன். சீமான் மனிதனா... மிருகமா... என்று எனக்குத் தெரியவில்லை. அசிங்கமாக இதை அரசியல் செய்யாதீர்கள். சீமான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும். யாருடைய வாழ்க்கையிலும் விளையாடாதீர்கள். யாரும் வெறுமென சாவதற்கு செல்ல மாட்டார்கள். நான் வாழ்வதெல்லாம் உங்களுக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன். அனைவருக்கும் நன்றி" என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க: என் சாவுக்கு சீமான்தான் காரணம்: விஜயலட்சுமி தற்கொலை முயற்சி