சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை வருகிற ஜூலை 15ஆம் தேதி, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, காமராஜரின் பிறந்தநாள் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், இலவச இரவு பாட சாலை திட்டத்திற்கான இடம் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும், அதற்கான வாடகை தொகையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், இரவு பாட சாலைக்குத் தேவையான ஆசியரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்டத் தலைவர்களுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் இளநிலை பட்டப் படிப்பு முடிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொகுதியில் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே குருதி கொடை, விழியகம் எனப்படும் கண் தானத் திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் போன்ற திட்டங்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஜூன் 17 அன்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வைத்து 2022 - 2023ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை விஜய் வழங்கினார்.
அந்த விழா மேடையில் பேசிய அவர், ‘அசுரன்’ படத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இடம் பெற்றிருந்த வசனத்தை கூறினார். அது மட்டுமல்லாமல், பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று ‘இலவச இரவு பாடசாலை’ தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சமீப காலங்களில் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பாக நடத்தப்படும் நிகழ்வுகளை தொகுதி வாரியாக நடத்துவது விஜய்யின் அரசியல் வருகையைக் குறிப்பதாக சினிமா மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருதி வருகின்றனர்.
மேலும், அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் ஆகியோரின் பிறந்தநாள் அன்று, விஜய் மக்கள் இயக்கத்தினர் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த விஜய் அறிவுறுத்தி இருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
அது மட்டுமல்லாமல், முன்னதாக காமராஜர் ஆட்சியில் கல்லூரிகளில் மாலை நேர வகுப்பு (Evening Batch) என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதும், தற்போது காமராஜர் பிறந்தநாளில் 'இரவு பாடசாலை திட்டம்' விஜய்யால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vijay: நடிகர் விஜய் காருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு!