சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை முதல் பாகம் வெளியானதை அடுத்து படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சேத்தன், ராஜிவ் மேனன், பவானி ஶ்ரீ உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் படத்தின் வெற்றி குறித்து மேடையில் பேசினர். அப்போது பேசி நடிகர் சேத்தன், ”எப்போதுமே சினிமாவில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் வெற்றி படங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் வெற்றிமாறனின் பங்கு நிறைந்தவையாகும். பல முயற்சிக்கு பிறகு இந்த படத்தில் வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கு நன்றி. மேலும் இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பிரமாண்டமாக இருந்தது” எனப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய, ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , “சில படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் இருப்பதும் வலிமையாகும். அதுபோன்று இந்தப் படத்தில் நான் இருப்பது பெருமையளிக்கிறது. இதற்காக வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி'' எனத் தெரிவித்தார். இவர்களின் வரிசையில், பின்தொடர்ந்த ராஜிவ் மேனன், ”வெற்றிமாறன் கேட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற பிறகு 6 பக்க வசனம் எப்படி பேசுவது என்று தெரியவில்லை.
அப்போது என்னிடம் வெற்றி நடிக்க வேண்டாம்; நீங்கள் நீங்களாக இருந்தால் போதும் என்றார். கமல் சொல்வது போல எனக்குள்ள தூங்கிட்டு இருந்த மிருகத்தை எழுப்பாதீங்க என்பது போல, எனக்குள்ள தூங்கிட்டு இருந்த நடிகனை எழுப்பி விட்டுட்டீங்க வெற்றி” என மிமிக்ரி செய்ததுடன் நிஜமான மனிதனை படத்தில் காட்டி, தன் படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவங்களையும் படத்தின் காட்சிகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சூரி, “ராஜிவ் மேனன் என்னைப் புகழ்ந்து பேசினார். ஆனால் இப்போதும் எனக்குப் புரியவில்லை. அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இந்த நிகழ்வு மறக்கமுடியாத நிகழ்வாக அமையும். படத்தில் உள்ள அனைவருக்கும் ஹீரோ என்றால் அது வெற்றிமாறன் தான். எவ்வளவு நன்றி சொன்னாலும் அது பத்தாது'' என புகழ்ந்து பாராட்டினார்.
மேலும் இதைத்தொடர்ந்து பேசிய அவர், ''படம் வெளியானபோது நான் என்னுடைய குல சாமியை கும்பிட்டுக் கொண்டே இருந்தேன். படம் வெளியான பிறகு தொலைபேசியில் நிறைய அழைப்புகள்(phone call)மூலம் வாழ்த்து வந்தது. ஆனால், அவை அனைத்தையும் என்னால் எடுக்க முடியவில்லை. நேற்று இரவு 5 மணி வரை கால் வந்துகொண்டே இருந்தது. தற்கொலை படை மாமா உனக்காக உயிரைக் கூட கொடுப்பேன் என்று சொல்லி எல்லாம் போன் வந்தது. உதயநிதி போன் செய்து படம் நன்றாக உள்ளது என்றார். இதற்காக ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளீர்கள் அது தெரிகிறது என்றும் மேலும் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் கூறினார். குறிப்பாக ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கூடுதலாக என்னுடைய தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனப் படக்குழு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் படத்தில் தன் சக நடிகனாக நடித்த விஜய் சேதுபதியை பாராட்டி, ''உனக்கு இருக்க பக்குவம் மற்றும் அணுகுமுறையின் தன்மையினால் தான் இந்த நிலையில் நீ இருக்கிறாய். உன்னிடம் இருந்து தான் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஹீரோ சக நடிகர்களை ஊக்குவித்தால் அவர்கள் மேலும் நன்றாக நடிப்பார்கள். அதை விஜய் சேதுபதி எப்போதும் செய்ய தவறவில்லை, தவறவும் மாட்டார்'' என புகழாரம் சூட்டினார்.
மேலும் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, கண் கலங்கிய படி, ''எத்தனை நாட்கள் படம் எடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, படம் எப்படி வந்துள்ளது என்பது தான் முக்கியம்'' என கண்ணீர் மல்க படக்குழு அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “மகிழ்ச்சியில் ரொம்ப திகைத்துப்போய் உள்ளேன். காலையில் படம் வெளியாகும்போது வெற்றி எனக்கு போன் செய்தார். எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டு படம் நடித்து கொடுத்ததற்கு எனக்கு நன்றி சொன்னார். நான் களிமண் போல தான் சென்றேன். இயக்குநரிடம் இருந்து தான் நான் எல்லாம் பெற்றுக்கொண்டேன். மொழி என்பது லேட்டாக தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு உணர்வு தான் எல்லாம்'' என படப்பிடிப்பின்போது ஏற்பட்ட தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்தார்.
மேலும் பேசிய விஜய் சேதுபதி, “எனக்கும் கௌதம் மேனனின் காட்சியின்போதும் வெற்றிமாறன் பரபரப்பாக இருந்தார். அது என்னிடம் வெளிப்பட்டது. நான் அவரிடம் அதைச்சொன்னேன். பின்னர் அவரின் நிதானத்தின் வழியாக தான் நான் எல்லாம் செய்தேன். நான் நல்ல இயக்குநரா என்று தெரியாது, ஆனால் நல்ல டெயிலர், அதனால் எப்படியாவது தைத்துக் கொடுத்துவிடுவேன்' என்றார்.
''நான் பெண்ணாக பிறக்கவில்லை. இல்லை என்றால் அவரை உஷார் செய்துவிடுவேன். அவரை பார்த்துக்கூட பேசாமல் இருக்க அது தான் காரணம். சரக்கு அடித்து விட்டு போதையில் பேசினால் கூட நான் வெற்றிமாறன் உடன் மரியாதையாகத் தான் பேசுவேன். எனக்கு இன்னும் அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. சமையல் செய்து கொண்டே இருக்கும்போது அது குறித்து கேள்வி கேட்பது ஒரு சிலர் தான். அப்படி தான் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார், எப்படி உள்ளது படம் என்று. அவர் ஒரு அற்புதமான இயக்குநர். நிறைய படிக்கக் கூடியவர்.
படத்தில் சொல்வதுபோல அவர் மேலே இவர் கீழே என்று அவர் யாரையும் நடத்தியது இல்லை. விஜய் சேதுபதி தனியாகவும் வாத்தியாரை தனியாகவும் சில விமர்சனங்களில் சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் வாத்தியார் வெற்றிமாறன் தான். வாத்தியார் நான் இல்லை. அந்த அறிவும் எனக்கு இல்லை. நான் வெறும் ஸ்பீக்கர், மைக் மாதிரி தான். அதன் பின்னால் இருக்கும் சிந்தனை அவர் தான்.
என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாம், என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், பணம் போட்டவர்களுக்கு அது கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் வெற்றிமாறன். தனக்கு என்ன வேண்டும் என தெளிவாக இருப்பவர் வெற்றிமாறன்' என வெற்றிமாறனோடு பயனித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர், ''வெண்ணிலா கபடிக் குழு படத்தின்போது இருந்து சூரி எனக்கு தெரியும். சூரியிடம் அதிகமாக கொஞ்சி குலாவியது கிடையாது. எங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசிக்கொள்வோம். சூரி, இந்த படத்திற்காக வெற்றிமாறன் மீது நம்பிக்கை வைத்து பல போராட்டங்களை கடந்து வந்து, இந்த நாளுக்காக வந்துள்ளான் என்பது தெரியும். இது சூரிக்கான வெற்றி. வெற்றிமாறன் கொடுத்த வெற்றி.
இதற்கு மேல் தான் சூரி கவனமாக இருக்க வேண்டும். யார் என்ன சொல்வார்கள் என்று தெரியும். யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கவனமாக இருக்க வேண்டும். இரண்டாம் பாகம் வெளி வரும்போது தெரியும், இந்த காடு வேல்ராஜ் கட்டுப்பாட்டில் உள்ளது என்று. காட்டின் ராஜா வேல்ராஜ் தான். இந்தப் படம் என்னுடைய நியாபகத்தில் கல்வெட்டில் பொறித்தது போல இருக்கும்'' என அனைவரையும் பாராட்டி படத்தின் பொது அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இவரைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ''இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதில் ரொம்ப ஈஸியான விஷயம் என்ன என்றால், அது இப்படி ஒரு படத்தை எடுப்பது தான். நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம் என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை. உண்மையான விஷயங்களை படத்தில் நிவர்த்தி செய்து எடுக்க வேண்டுமென உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் முதல் காட்சியின் இடைவேளையின் போதே மீடியா, இதை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கொண்டாட வேண்டும் என நினைப்பதுதான் வெற்றி.
படத்தில் நிறைய குறைகள் உள்ளன. எல்லா மீடியாவும் இதை சப்போர்ட் செய்கின்றனர். மக்கள் இந்தப் படத்தை அவர்களுடையது என ஃபீல் செய்து உணருகின்றனர். அந்த வலியை அவர்களுடைய வலியாகவும் அவர்களுடைய படமாகவும் நினைத்து பெருமைப்படுவது எங்களுடைய நன்றிக்குரியது.
நல்லவர்களை கதையின் நாயகனாக பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. நாங்களே அதை எடுப்பதில்லை. அப்படி நல்லவர்களை கதையின் நாயகனாக வைத்து, இரண்டாம் பாகம் கேட்கும் அனைவருக்கும் நன்றி. இளையராஜா தான் முதன்முதலில் சொன்னார். அவர் படம் பார்த்துவிட்டு சொன்னார், இது பெரிய படமாக கொண்டாடப்படும். உனக்கு என்ன வேண்டும் சொல், நான் பண்ணி தருகிறேன் என்றார். அவருக்கு பாடல்களுக்காக நான் குறைந்த நாட்கள் தான் கொடுத்தேன். அதிலும் சிறப்பாக செய்து கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் சிறப்பு நன்றி சொல்லிக்கொள்கிறேன்'' என படக்குழுவினர் முன்னிலையில் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? - கோலிவுட்டில் கசிந்த தகவலால் ரசிகர்கள் குஷி!