சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு பேர் திருநங்கை ஒருவரிடம் பேசியுள்ளனர்.
இதைப் பார்த்த காவலர் கார்த்திகேயன் நான்கு பேரிடம் விசாரித்தபோது அவர்கள் வழக்கறிஞர்கள் எனத் தெரிவித்தனர். இதையடுத்து இரவு நேரத்தில் கும்பலாக சுற்றக் கூடாது என எச்சரித்து கலைந்து செல்லுமாறு கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் காவலர் வைத்திருந்த லத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியதோடு, அவர் வைத்திருந்த வாக்கி-டாக்கியையும் உடைத்துள்ளனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தைச் சேர்ந்த அக்பர், முகமது என்பது தெரியவந்துள்ளது. காவலரை தாக்கிய காணொலி தற்போது இணைதளத்தில் வைரலாகியுள்ளது.