மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், கோயம்புத்தூர் தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கு வேட்பாளர்களை கெளரவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன்,
"தமிழகத்தை பொறுத்தவரையில் மதச்சார்பற்ற கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. 1971 தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அணி தற்போது பா.ஜ.க வெற்றி பெற்றதைவிட அதிக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் படு தோல்வி அடைந்தார்கள், எனவே தேர்தலில் ஜெயித்தால் எதிர்காலத்தையே ஜெயித்ததாக அர்த்தம் ஆகாது.
தமிழகத்தை போன்று பிற மாநிலங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்படவில்லை அதுவே பா.ஜ.க. தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வழி வகுத்துள்ளது. அடுத்தவர்கள் வெற்றியை பற்றி விமர்சிப்பதற்கு முன்னால் 37 தொகுதிகளில் தோற்றதற்கான காரணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கண்டறிய வேண்டும். தற்காலிக வெற்றி என்று கூறி மக்களை கொச்சைப்படுத்துகிறார்" என்று குற்றம் சாட்டினார்.