இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "கடலூர்,விழுப்புரம் மாவட்டத்தில் 139 சதுர கிலோ மீட்டர், புதுச்சேரியில் இரண்டு சதுர கிலோ மீட்டர், டெல்டா மாவட்ட ஆழமற்ற கடல் பகுதியில் 1,654 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பில், 116 எரிவாயுக் கிணறுகளை அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மோடியின் மத்திய பாஜக அரசு.
இதில் முதல் கட்டமாக, 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்து, அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறது. இது, 14 தமிழர்களைச் சுட்டுக்கொன்று, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனையும் காணாமலடித்ததற்கான பரிசுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதில் பழனிசாமியின் அதிமுக அரசு செய்ததுதான் பச்சை அயோக்கியத்தனம். அதாவது, 2018 அக். 9ஆம் தேதியன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் மொத்தம் 13 கோரிக்கைகள்;
அதில் 10ஆவது கோரிக்கை, தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்ற மக்களின் கருத்துக்கேட்பு தேவையில்லை, மத்திய சுற்றுச்சூழல் துறையே அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என்கிறது. அப்படியென்றால் தமிழ்நாடு சுற்றுச்சூழல் விதியினையே திருத்தி, மோடிக்கும் அவர் நண்பர் ஸ்டெர்லைட் வேதாந்தா அனில் அகர்வாலுக்கும் உதவியுள்ளார் பழனிசாமி.
நெடுவாசல், கதிராமங்கலம் என ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை மோடியும் பழனிசாமியும். ஆனால் பாசிஸ்ட்டுகளின் இந்தப் பேரழிவுத் திட்டங்களை தமிழ் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து இதனைத் தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.