சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மசோதாவில், “தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம் 1982ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (கவர்னர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும். குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தம் செய்வதற்காக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று சட்டசபையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம் 1982ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” என கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டசபையில் மற்றொரு மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஆண்டு சட்டசபையில் திருத்தப்பட்ட வரவு செலவு கணக்கை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, முதல் மூன்று ஆண்டுகளுக்கு பல்வேறு மாநிலச் சட்டங்களின் கீழ் ஆய்வுகள் இல்லாமலும், அனுமதிகளைப் பெறாமலும் தற்காலிகச் சான்று அடிப்படையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளடங்கிய புதிய தொழில் அலகுகளை நிறுவ அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதற்காக 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் திருத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என கூறப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதாக்கள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்னர் நிறைவேறின.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை