சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா பார்வையிட்டு, ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையைக் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து பயிற்சியின்போது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற விளையாட்டு வீராங்கனை மாரியம்மா, மற்றும் பாலாஜி, 12ஆம் வகுப்பு மாணவி சிந்து ஆகியோரின் உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் விசாரித்தார்.
பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா ஆவடியில் புதிதாக தொடங்கப்படவுள்ள மத்திய அரசின் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அவர் பேசும்போது, 'ஆவடியில் அமைக்கப்படும் மத்திய அரசின் புதிய சுகாதார மையத்திற்கு கட்டுமானப் பணிகள் டிசம்பர் 22-ம் தேதிக்குள் முடிவடையும். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
தமிழ்நாடு அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு நான் சென்றிருக்கிறேன். அரசு மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பமான மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியை அங்கு நான் கண்டுள்ளேன். 2 அறுவை சிகிச்சை கன்சோல்களைக் கொண்ட ஒரே மையம், இது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1.58 கோடி குடும்பங்களுக்காக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ள 11 கோடியே 26 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ்களில் 94 விழுக்காடு முதல் டோஸ், 82 விழுக்காடு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய சாதனை.
தமிழ்நாட்டில் 50,000 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் ’நிக்ஷய்’ திட்டத்திற்கு வெறும் 5 விழுக்காடு பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து, 35 விழுக்காடு பேர் இன்னும் இசைவு தெரிவிக்காமல் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை. மேலும் யானைக்கால் நோய் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிந்துள்ளது.
இது ஊக்கமளிக்கும் விஷயமாக இருந்தபோதும், விழிப்புடன் இருந்து, மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் தலைமை தொலைநோக்குப் பார்வை கொண்டது மட்டுமல்ல, அனுதாபம் நிறைந்ததும் கூட. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 'ஒரே நாடு ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கிவைப்பார். அதன்மூலம், டயாலிசிஸ் தேவை ஏற்படும் நோயாளி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அந்த வசதியைப் பெற முடியும்.
குஜராத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டால், தமிழ்நாட்டிலோ அல்லது நாட்டின் எந்த ஒரு பகுதியிலோ அவர் சுலபமாக அதனைப்பெற முடியும்.
’ஆயுஷ்மான் பாரத்’ சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் திட்டத்தின் கீழ் 2022 டிசம்பருக்குள் 9135 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு எதிராக, மாநிலத்தில் 7052 மையங்கள் (ஜூன் 2022 வரை) செயல்படுகின்றன. இந்த மையங்களில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொதுவான புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு இதுவரை (மார்ச் 2022 வரை) 542.07 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ. 2600 கோடியையும், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சுகாதார உள்கட்டமைப்பிற்காக ரூ. 404 கோடியையும் பிரதமர் மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
சுகாதார இயக்கங்களில் பணிபுரியும் அனைத்து கோவிட் போராளிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பேசினார்.
இதையும் படிங்க: இந்தாண்டு போதைப்பொருள் வழக்குகள் 50% அதிகரிப்பு - சங்கர் ஜிவால்