சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் மத்திய அரசின் 'ரோஸ்கர் மேளா’ எனும் வேலை வாய்ப்பு விழாவின் கீழ் தேர்வான 247 பேருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா விழாவின் கீழ் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட ஆட்களுக்கு சுமார் 71,000 நியமனக் கடிதங்களை விநியோகித்துள்ளது. ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்னேற்றப் படியாகும்.
ரோஸ்கர் மேளா அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க செயல்படுகிறது. மேலும் இது இளைஞர்களை மேம்படுத்தி தேசிய வளர்ச்சியில் அவர்களின் தீவிர பங்களிப்பை செயல்படுத்துகிறது. சென்னையில் இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெறும் விண்ணப்பதாரர்கள் தபால் துறை உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றத் தேர்வானவர்கள்.
இவர்களின் பணி சிறக்க மனதாரப் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பணி நியமன ஆணை பெற்ற கீர்த்தனா கூறுகையில், “எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியான எனக்கு மத்திய அரசு பணி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கடந்த 2016 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்து முடித்தேன். அஞ்சல்துறைக்கான வேலைவாய்ப்பு மத்திய அரசு அறிவித்தது.
இதில் நான் பதிவு செய்திருந்த பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. என்னுடைய 10வது மதிப்பெண் மூலமாக இந்த பணி எனக்கு கிடைத்துள்ளது. நான் எம்.ஏ படித்துள்ளேன். இதற்கு தகுதியான எழுத்து தேர்வையும் எழுத உள்ளேன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் பணி நியமன ஆணை பெற்றதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையைத் தொடர்ந்து நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற மத்திய அரசின் ரோஸ்கர் மேளா வேலை வாய்ப்பு விழா கோவையிலும் காணொலி காட்சிகள் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அஞ்சல் துறை, தொழிளாலர் ஈட்டுறுதி கழகம் மற்றும் இரயில்வே துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 371 பேருக்கு பணி நியமனக் ஆணைகள் இனைய வழியில் வழங்கப்பட்டன.
இதில் 25 நபர்களுக்கு நேரடியாக மத்திய இணை அமைச்சர் ஆணை கடிதங்களை வழங்கினார். மேலும் இந்த விழா அரசு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என இளைஞ்ரகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அரசியலில் தொடரும் குழப்பம்; பரமேஷ்வரை முதலமைச்சர் ஆக்கக்கோரி ஆதரவாளர்கள் போராட்டம்