இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வாக்கெடுப்பில், நடுநிலை வகிப்பதாக இந்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக, இலங்கை அரசின் குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்திய அரசு வாக்களித்திருக்க வேண்டும்.
சொல்லப்போனால், இலங்கை தமிழர்கள் நலன் காக்கும் விதத்தில், இப்படியான தீர்மானத்தை முன்னெடுக்கிற பணியையே இந்தியாதான் செய்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம், ராஜபட்ச அரசு இழைத்த கொடுமைகளுக்கு ஆதரவான நிலையையே வெளிப்படுத்தியிருக்கிறது. சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தும் விதத்தில், இந்திய அரசின் நிலைப்பாடு அமையவில்லை.
ஏற்கனவே ஐநா மன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்தும் இலங்கை அரசு விலகிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு இந்திய அரசு ஆதரவு காட்டுவது பெரும் தவறாகும். இது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த நிலைப்பாட்டினை கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.