சென்னை: மாநகராட்சியில் 5 பள்ளிகளில் 3டி தொழில்நுட்பத்தில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் கற்பிக்கும் வசதியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். இந்த மெய்நிகர் வகுப்புகளில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட படங்களை மாணவர்கள் கருவியை பொருத்திக் கொண்டு பார்க்க முடியும்.
மெய்நிகர் வகுப்பிற்கான் கருவியை மாணவிகளுக்கு பொருத்தி விட்டு, சேப்பாக்கம் திருல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழியும் பொருத்திக் கொண்டு பார்த்தனர். அதன் பின்னர் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மெட்டா கல்வி புதிய முயற்சியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி இளைஞரணி தலைவராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் முடிந்து 4 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. அவர் 4 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார்.
விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை மாணவிகளுக்கு போட்டபோது கருணாநிதி கண்ணொளி திட்டத்தில் கண்ணாடி போட்டு விட்டது தான் ஞாபகத்திற்கு வந்தது. ஸ்மார்ட் ஆய்வகங்களில் படிக்கும் பொருள்களை தொட்டு பார்க்க முடியும். ஆனால் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனுபவமாக, நேரடியாக பார்க்க முடியும். தமிழ்நாட்டில் 38 ஆயிரம் பள்ளிகள் இருக்கிறது. அங்கு ஸ்டெம் லேப் ஆய்வகம் தொடங்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு மாதம் முன்பு 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்து காண்பித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை பார்த்து அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறினேன். அதன் பின்னர் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி கொடுத்து வைத்த தொகுதி எனக் கூறினார்.
ஆனால் அதுவல்ல. நான் தான் கொடுத்து வைத்தவன், மாணவர்களுக்கு கல்வி திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என கருணாநிதி கூறினார். பெண்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க பாடுபட்டு வருகிறோம்.
விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க 5 பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கி , பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது அருகில் அமர்ந்திருந்த மாணவி தைரியமாக என்னிடம் நீங்கள் யார், உங்கள் பெயர் என்ன, உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன உறவு என தைரியமாக கேட்டார். இன்றைய இளம் தலைமுறையினர் எவ்வித தயக்கமும் இல்லாமல் மிக தைரியமாக இருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: எம்.இ, எம்டெக், எம்ஆர்க் மாணவர் சேர்க்கை - ஆகஸ்ட் 3 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு