சென்னை: பாலவாக்கம் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் சாது (26). இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு இரண்டு வயதில் தட்சன் என்ற குழந்தை உள்ளது. சாது நேற்று இரவு குடும்பத்துடன் டாக்டர் படம் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, பனையூர் 12ஆவது தெரு சந்திப்பு அருகே சென்றுகொண்டிருக்கும்போது பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் முன்னே சென்ற சாதுவின் வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் சாதுவிற்கு கை கால் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்திருந்த மனைவி நந்தினி என்பவருக்கு இடுப்புப் பகுதியில் உள் காயம் ஏற்பட்டுள்ளது. கையில் வைத்திருந்த இரண்டு வயது ஆண் குழந்தை தவறி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. விபத்தை ஏற்படுத்திய கடலூர் மாவட்டம் பெரிய கரைக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (23), திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (23) இருவருக்கும் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற நிலையில் அடையாறு போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க :குறைந்து வரும் கரோனா - 1245 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு