சென்னை: கரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்த, அனைவரும் தேர்ச்சி என கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தனித்தேர்வர் அளித்த மனு
இந்த உத்தரவின் பலனைத் தனித்தேர்வர்களுக்கும் வழங்கக் கோரி, கோயம்புத்தூர் சரவணம்பட்டியைச் சேர்ந்த தனித்தேர்வர் பிளஸ்வின், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, “2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோதும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. ஒரே வகையான பாடத்திட்டத்தை பின்பற்றும்போது, பள்ளி மாணவர்கள் எனவும்; தனித்தேர்வர்கள் என்றும் பாகுபாடு காட்டுவது தவறு” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், நான்கு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு மனு
இதற்கிடையில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரி, சென்னை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த எஸ் அஜய் தாஸ் என்ற மாணவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது, “2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்து, பின்னர் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றேன்.
மீதமுள்ள இரண்டு பாடங்களை 2020ஆம் ஆண்டு எழுதத் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இரு ஆண்டுகளாக துணைத்தேர்வுகள் நடைபெறாததால் மேற்படிப்பு, வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு துணைத்தேர்வு நடத்தக் கோரி அனுப்பிய மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை.. அறத்தை காலில் போட்டு மிதித்த கர்நாடகா..'