நாகப்பட்டினம் பஞ்சலோக அம்மன் சிலையை ரூ. 90 லட்சத்துக்கும் நடராஜர் சிலையை ரூ. 30 லட்சத்துக்கும் விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினர் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (41) என்ற ஓட்டுநரிடம் சிலையை வாங்குவதுபோல் தொலைபேசியில் பேசியுள்ளார்கள். அப்போது பழமையான பஞ்சலோக அம்மன் சிலை ரூ.90 லட்சத்துக்கும் நடராஜர் சிலை ரூ.30 லட்சத்துக்கும் விற்பனைக்கு இருப்பதாக செல்வம் கூறியுள்ளார்.
இதையடுத்து தனிப்படையினர் வேதாரண்யம் பேருந்து நிலையத்திற்கு செல்வத்தை வருமாறு கூறி அங்கு சென்றுள்ளனர். அங்கு வந்த செல்வத்திடம் விசாரித்தபோது, அகஸ்தியர் ஏரிக்கரை வில்வநாத விசாலாட்சி அம்மன் ஆலயத்தில் கோயில் குருக்களாகப் பணியாற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பைரவசுந்தரம் (64) என்பவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு பஞ்சலோக சிவகாமி சுந்தரி அம்மன் சிலை, 2 நடராஜர் சிலைகள், வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் சிலை உள்பட 9 சிலைகளைப் பார்த்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், இருவரையும் கையும்களவுமாகப் பிடித்து அவர்களிடமிருந்து சிலைகளை மீட்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோயில் குருக்கள் பைரவசுந்தரம், செல்வம் ஆகியோரை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சிலைகளை வாங்க பேரம் பேசி சென்ற முக்கியப் பிரமுகர்கள் குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சிலைகள் மீட்பு குறித்து சென்னை கிண்டியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் பேசுகையில், ”மீட்கப்பட்ட சிலைகளை ரூ. 1 கோடியே 20 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி அன்பு நிருபர்களிடம் கூறுகையில், “சிவகாமி சுந்தரி அம்மன் சிலை வேதாரண்யம் அருகே தாமரைகுளம் என்ற இடத்திலுள்ள கோயில் சிலையாக இருக்கலாம். மற்ற சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டவை என விசாரித்துவருகிறோம். சிலைகள் குறித்து ஏதாவது புகார் செய்யப்பட்டுள்ளதா என்று விசாரித்துவருகிறோம்.
கைதான கோயில் குருக்கள் பணியாற்றிய கோயில்களில் ஏதாவது சிலைகள் காணாமல்போய் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. எந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலைகள் என்பதை விசாரித்துவருகிறோம். பழமையான சிலை என்று கூறி மோசடி செய்ய இருந்தார்களா என்பதையும் விசாரிக்க வேண்டியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் சிலைத் திருட்டு: அறநிலையத் துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு!