சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கிண்டி - போரூரை இணைக்கும் மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றி கொண்டு ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரயில் பணிக்காக டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இரும்பு கம்பிகளை ராட்சத கிரேனில் எடுத்து வைக்கும் போது, இரும்பு கம்பிகளோடு கிரேன் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது. இதில் மாநகர பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
மேலும் அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்களான அய்யப்பன் தாங்கலை சேர்ந்த சிவனாந்த் (43), ஆதம்பாக்கதை சேர்ந்த பொன் சந்திரசேகர் (35) ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது மக்னா யானை!