சென்னையில் பொதுமக்களுக்கு கால்செய்து கால் சென்டரிலிருந்து பேசுவதாகக் கூறி குறைந்த வட்டியில் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை பேசி அவர்களிடம் வங்கி ஓடிபி எண்ணை பெற்றுகொண்டு லட்சக் கணக்கில் ஒரு கும்பல் மோசடி செய்வதாகத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனால் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அந்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்தக் கும்பல் தொடர்புகொண்ட செல்போன் எண்ணை டிராக் செய்தபோது நாவலூர் அருகே உள்ள ஒரு இடத்தில் போலியாக கால் சென்டர் நடத்திவந்தது தெரியவந்தது.
இதனால் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலியாக கால் சென்டர் நடத்தி வந்த இருவரை கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் தாழம்பூர் பகுதியை சேர்ந்த மணி வர்மா (25), நடராஜன்(34) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் இருவரும் பொறியியல் பட்டபடிப்பு முடித்துள்ளதும் தெரியவந்தது. கரோனா காலத்தில் பொதுமக்களிடையே பண பற்றாக்குறை ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதால் அவர்களை குறிவைத்து குறைந்த வட்டியில் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
பின்னர் லோன் வேண்டும் என்று கூறும் பொதுமக்களிடம் ஆவணங்களை பெற்று வங்கி ஓடிபி எண்ணையும் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைத்தனர்.
குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் போலியாக கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக சுமார் 135 நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் லோன் வாங்கி தருவதாக கூறி செல்போன் அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வங்கி விவரங்களை ஒருவரிடமும் பகிர வேண்டாம் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க... ரூ.300 பண மோசடி செய்த நிறுவனத்தோடு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தொடர்பா?