சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம். இவரது மகன் கிங்ஸ்டன் கிஷோர் (17). 11ஆம் வகுப்பு படித்து வந்த இவர் பெற்றோருடன் சண்டையிட்டு கொண்டு வீட்டிலிருந்து ரூ.63,500யை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று (ஏப். 29) வந்துள்ளார்.
அப்போது அங்கு ரோந்து பணியிலிருந்த சி.எம்.பி.டி காவல் நிலைய காவலர்களான வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் மாணவர் கிங்ஸ்டனை வழிமறித்து, அவரைத் தாக்கி கையிலிருந்த 63,500 பணத்தை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் கிங்ஸ்டன் பணமின்றி எங்கே செல்வது என்று செய்வதறியாமல், தனது தந்தையான அந்தோணி செல்வத்திற்கு போன் செய்து நடந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்தோணி செல்வம் சி.எம்.பி.டி காவல் நிலையத்திற்கு வந்து தனது மகனிடம் இருந்த பணத்தை இரு காவலர்கள் பறித்து சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். அப்போது காவலர்கள் மீதான புகார் என்பதால் உதவி ஆணையரிடம் சி.எம்.பி.டி காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து இரு காவலர்களிடமும் விசாரணை நடைப்பெற்றது. இதற்கிடையில் காவலர்கள் வேல்முருகன், அருண் கார்த்திக் ஆகியோர் அந்தோணி செல்வத்தைப் போன் மூலம் தொடர்பு கொண்டு புகாரை வாபஸ் பெறுமாறும், அதற்கு ரூ. 2லட்சம் தருவதாகக் கூறியுள்ளனர். அப்போது அந்தோணி செல்வம் முதலில் தனது மகனிடம் பறித்த பணத்தை தருமாறு கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த காவலர்கள் அந்தோணியை நேரில் சந்தித்து பணத்தை வழங்கியுள்ளனர். முதலில் ரூ.45 ஆயிரத்தை வழங்கியுள்ளனர். அப்போது அந்தோணிக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் ரூ. 62ஆயிரத்தை வழங்கினர். மீதி பணத்தை செலவழித்ததாகத் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கானது மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஷ்வரிக்கு அனுப்பபட்டது. அப்போது இரு காவலர்களிடம் நடைபெற்ற விசாரணையில் மாணவரிடமிருந்து காவலர்கள் பணத்தை பறித்தது நிரூபணமாகியது. இதனையடுத்து காவலர்கள் அருண் கார்த்திக், வேல்முருகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, இணை ஆணையர் ராஜேஷ்வரி உத்தரவு பிறப்பித்தார். ஏற்கெனவே காவலர் வேல்முருகன் லஞ்சம் பெற்ற புகாரில் சிக்கி சி.எம்.பி.டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.