சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் ராம்மூர்த்தி, நந்தகுமார் உள்ளிட்ட காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெமினி பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரை ஓட்டி வந்த பெண்ணும், அவரது ஆண் நண்பரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, காவலர் ராம்மூர்த்தி அந்தப் பெண்ணை பிரித்தீங் அனலைசர் கருவியில் வாய் வைத்து ஊதுமாறு கேட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், 'ஒரு பெண்ணை எப்படி ஊத சொல்லலாம்' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் காவலர் ராம்மூர்த்தியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சில திருநங்கைகள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் காவலர்களிடம் சண்டையிட்டுள்ளனர். அந்த நேரத்தில் போதையில் காரை ஓட்டி வந்த பெண் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
பின்னர் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, காவலரை கன்னத்தில் அறைந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் நுங்கம்பாக்கம் மூர் சாலையைச் சேர்ந்த ஷெரின் பானு(48) என்பதும் இவர் பைனான்சியல் கன்சல்டன்டன்ட் ஆகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும், சம்பவத்தன்று ஷெரின் பானு, மும்பையைச் சேர்ந்த விமான நிலைய ஊழியரான தனது ஆண் நண்பர் விக்னேஷ்(30) என்பவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு காரில் திரும்பியபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு!!