சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாவது, "மோடியின் தொடர் வெற்றிக்கு காரணம் அவரது அயராத உழைப்பு. ஆனால் அவர் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. இப்போதெல்லாம் திடீரென அரசியல்வாதிகள் உருவாகின்றனர். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் மோடி போன்ற ஒருவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என சோ கூறுவார் என்றார்.
பெண்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் இத்தனை சதவிகிதம் என வகுக்க முடியாது. தகுதியான பெண்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் இவ்வளவு இடங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என இருந்தால், அரசியலில் தகுதி இல்லாதவர்களும் நுழைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஒரு காலத்தில் அரசு அலுவலங்களில் பெண் அதிகாரிகள் லஞ்சம் எதையும் வாங்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது சிலர் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் கேட்கும் நிலை உள்ளது. பெண்களுக்கு குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தை கவனிப்பது, நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார்.
நீங்கள் தான் பிரதமர் ஆகவேண்டும் என யாரோ ஆசையை விதைத்ததன் காரணமாக நிதிஷ் குமார், மோடிக்கு எதிராக செயல்பட்டு பின்னர் ராமதாஸ் போல் ஆகிவிட்டதாக குருமூர்த்தி கூறினார். அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் இம்சை செய்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்து வருகிறார் என்றுதான் பொருள்.
எதிர்ப்பில்தான் அனுபவம் வரும். கஷ்டப்பட்டால்தான் அனுபவம் வரும். எனவே அண்ணாமலைக்கு அந்த அனுபவம் வரட்டும். அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு வரட்டும். அதை நான் வரவேற்கிறேன். மாண்புமிகு என்ற சொல் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது. அவர் மாண்புமிகு என்று இல்லாமல் அந்த இடத்திற்கு போக வேண்டும் என விரும்புகிறேன்.
அண்ணாமலையின் தனிப்பட்ட வளர்ச்சியை விட அவருக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தங்கள் வளர வேண்டும். அந்த நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது என்று குரூமூர்த்தி தெரிவித்தார். நாட்டை வழி நடத்த தமிழை பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. மோடிக்கு தமிழ் மீது ஆர்வம் இருந்தாலும் ஒவ்வொரு மாநில மொழியில் திட்டங்களின் பெயர் வைக்க முடியாது. எனவே பொதுவான பெயர் வைக்க வேண்டும்.
மோடிக்கு தமிழ் உணர்வு உள்ளது, என்னிடம் அவர் கூறியுள்ளதாக குருமூர்த்தி தெரிவித்தார். சீனாவின் அச்சுறுத்தலுக்கு காரணம் ஒரு போட்டி. சீனாவின் அதிபரைவிட மோடிக்கு அதிக மரியாதை இருக்கிறது. உலகத்தில் உயர்ந்த இடத்தில் முதலிடத்தில் மோடிதான் உள்ளார் என ஆய்வு அறிக்கை கூறுகிறது என்றார்.
இதையும் படிங்க: ஆளுநர் குறித்து திமுக நிர்வாகி அவதூறு பேச்சு; நீதிமன்றத்தை அணுக சென்னை காவல்துறை பரிந்துரை