அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் அதிமுக தலைமையின் மீது அதிருப்தி கொண்டு தினகரனை ஆதரித்து வந்தனர். இதனால் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்த மூவரை நீக்குவதற்கு முடிவெடுத்து விளக்கம் கேட்டு சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்திருந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் காரணமாக அந்த நோட்டீஸ்க்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த ரத்தினசபாபதி இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரத்தினசபாபதி, "தடுமாறிய நிலையில் இருந்த எஎன்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவில் மீண்டும் இணைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தானாக முடிந்துவிடும். சபாநாயகர் கொடுத்த நோட்டீஸ்க்கு அடுத்த கட்டமாக விளக்கம் அளிப்பேன்.
அதிமுகவில் தான் உண்மையான வெற்றியும், சின்னமும் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளேன். கலைச்செல்வன், பிரபு ஆகிய இருவரும் விரைவில் இணைவார்கள். சசிகலா உள்பட அனைவரும் அதிமுகவில் இணைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.