விழுப்புரம்: செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின் பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரமம் என்ற பெயரில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த இல்லத்தில் வசித்து வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார் எழும்பியது.
இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆசிரமம் உரிமம் இன்றி இயங்கி வந்ததும், அங்கிருந்தவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அன்பு ஜோதி இல்லத்தை நிர்வகித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜுபின் உள்பட 9 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் டிஜிபி சைலேந்திர பாபு இந்த வழக்கினை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு நடத்தி அங்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகள், அங்கிருந்தவர்களைத் தாக்கப் பயன்படுத்திய சவுக்கு கட்டை உட்பட மேலும் சில தடயங்களைச் சேகரித்தனர். மேலும் இந்த ஆசிரமத்திலிருந்து நூறுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும் ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இதுசம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.