சென்னை: சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், கீழ ஈரால் மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ஜாபர் என்பதும், செல்வம் என்பவர் தனது நண்பர்களான மகேஷ், சரவணன் ஆகியோருடன் இணைந்து ஜாபரை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், மதுபானக் கடையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக ஜாபரை கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, மகேஷ், சரவணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பர்னிச்சர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - 8 பேர் கைது