சென்னை: பொறியியில் படிப்புகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், 2020-21 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளன.
நாளை கடைசி நாள்
இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் (ஆக 24) விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இதுவரை பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 67 ஆயிரத்து 442 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 35 ஆயிரத்து 764 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 1 லட்சத்து 26 ஆயிரத்து 605 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வு விவரம்
மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது.
சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளி வென்ற ஷைலி சிங்குக்கு பாராட்டு தெரிவித்த அனுராக் தாக்கூர்!