சென்னை: திருட்டு வழக்கில் கைதான இளைஞர் சிறையில் இருக்கும் நிலையில் அவரை மற்றொரு வழக்குக்காக மூன்று ஆண்டுகளாகத் தேடி வந்த சென்னை அரும்பாக்கம் போலீசார்..!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீடு ஒன்றில் ஆறரை லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்னேஷை அப்போதே சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலைய போலீசார் மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்த தகவல் அரும்பாக்கம் போலீசாருக்கு தெரியாததால் தொடர்ந்து விக்னேஷை மூன்று ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இத்தகைய சூழலில் சிறைத்துறை நிர்வாகம் கைதிகளின் கைரேகையை சில தினங்களுக்கு முன்பு கணினியில் புதுப்பித்துள்ளனர் அப்போதுதான் விக்னேஷ் ஏற்கனவே சிறையில் இருப்பது சென்னை அரும்பாக்க போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதை அடுத்து அரும்பாக்கம் போலீசார் புழல் சிறைக்குச் சென்று விக்னேஷை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவான நபர்களைக் கைது செய்ய வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்...
சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் ஏசியன் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த கணேஷ் குமார், செந்தில் குமார் ஆகிய சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தீபாவளி சீட்டு பிடித்துள்ளனர். இதை அடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் ரூ.2500 வீதம் மாதம் மாதம் கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட நபர்கள் இருவரையும் பிடித்து தங்கள் பணத்தை மீட்டுத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இருவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் இரண்டு நபர்களையும் போலீசார் பிடிக்காமல் உள்ளனர் உடனடியாக இருவரையும் கைது செய்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
சென்னையில் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய விலை உயர்ந்த 42 செல்போன்களை திருடிய ஊழியரிடம் போலீசார் விசாரணை..!
சென்னை மயிலாப்பூரில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஊழியர்கள் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய செல்ஃபோன்கள் சரிவரச் சென்றடைவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக மேலாளர் சிவசுப்பிரமணியன் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அங்கு பேக்கிங் ஊழியராக பணிபுரிந்து வரும் அஜித் என்பவர் செல்போன்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலாளர் சிவசுப்பிரமணியன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஊழியர் அஜித்தைப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், சாம்சங் மற்றும் ஐபோன் உள்ளிட்ட சுமார் 42 விலை உயர்ந்த செல்போன்களை திருடி பீச் ஸ்டேஷனில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணகி நகரில் புறாவைப் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவன் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!
சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எழில் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் குட்டி (15), பட்ரோட்டில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (டிச 14) 4வது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த புறாவைப் பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக 4வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி குட்டி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கண்ணகி நகர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் ஆஜர்!