சென்னை: சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில், சிபிசிஎல் நிறுவனம் சார்பில் முதலில் எண்ணெய் கசிவு தங்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறவில்லை எனவும், 25 ஆலைகள் மணலி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் செயல்பட்டு வருவதால் தாங்கள் மட்டும் பொறுப்பு அல்ல என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்த பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிபிசிஎல் நிறுவனம் அதிகப்படியான கழிவுகளைத் தேக்கி வைத்திருந்ததே எண்ணெய் கசிவு ஏற்படக் காரணம் என குற்றம் சாட்டியது.
இதை அடுத்து, எண்ணெய் கழிவுகள் எப்படி அகற்றப்படவுள்ளது? அதற்கான அரசின் நடவடிக்கைகள் என்ன? இதுவரை கடலில் கலந்த எண்ணெய்கள் எவ்வளவு அகற்றப்பட்டது? என அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், அறிவியல் ரீதியிலான தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 625 மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் அகற்றும் பணி மிக வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் 33 டேங்கர்கள் மூலம் இதுவரை 7 ஆயிரத்து 260 லிட்டர் எண்ணெய் எடுக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள பயோ ரெமெடியேசன் மையத்திற்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த எண்ணெய் கசிவு 20 டன் அளவிற்கு மணலில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், எண்ணெய் அள்ளும் பணியில் 75 படகுகள், 4 ஜேசிபி இயந்திரங்கள் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அறிவியல் பூர்வமாக எண்ணெய்யைப் பிரித்து எடுப்பது, தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையைச் சரி செய்வது குறித்து சென்னை ஐஐடி-யிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.
எண்ணெய் அதிகம் தேங்கி உள்ள 1 கிலோ மீட்டர் பகுதிகளில் எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் மூலம் எண்ணெய் அகற்றப்படுகிறது. மீதமுள்ள 10 கிலோமீட்டர் பகுதியில் குறைவான அளவில் தண்ணீரில் எண்ணெய் கலந்துள்ளதால் அதனை எண்ணெய் உறிஞ்சும் அட்டை மூலம் அகற்ற முடியாததால், மாற்று உபகரணங்கள் கொண்டும் அகற்றப்படுகிறது.
டிசம்பர் 17ஆம் தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்படும் என்றும், எண்ணெய் முழுவதுமாக அகற்றுவதற்கு டிசம்பர் 20ஆம் தேதி வரை அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, இந்த பணியில் தாமதமாகக் காரணமானவர்கள் மீது கடுமையாக அபராதம் விதிக்கப்படும் என்றும், படகுகள், ஆட்களை அதிகப்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டும் எனவும், டிசம்பர் 17க்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிசம்பர் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று (டிச 18) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், சிபிசிஎல் நிறுவனம் தான் எண்ணெய் கசிவுக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. ஐஐடி நிபுணர் டாக்டர் இந்திரமதி குழு பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறனர்.
சுமார் 10 டன் அளவுக்கு எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது வரை, சுமார் 60 ஆயிரத்து 574 லிட்டர் அளவுக்கு எண்ணெய் மண் மற்றும் கழிவுகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மணலியில் உள்ள மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை (டிச 19) எண்ணெய் அகற்றும் பணிகள் முழுமையாக முடிவடையும். இந்த எண்ணெய் கசிவால் பழவேற்காடு பறவைகள் மற்றும் பல்லுயிர் சூழல் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது? அதை மீட்பதற்காக நடவடிக்கை என்ன? இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. தவறு செய்த நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் குற்ற வழக்குப் பதிந்து, சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், கடந்த 10 நாட்களாகக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்க முடிவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் தடுப்பதற்காக நிரந்தர தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.
பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், எண்ணெய் கசிவால் பறவைகள் முதல் அரிய நீர் வாழ் உயிரினங்கள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், எதிர்காலத்தில் உயிரினங்களைப் பாதுகாப்பது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வாரியம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இதுவரை எவ்வளவு பல்லுயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எப்படி சரி செய்வது? எப்படி மறு மீளாக்கம் செய்வது? பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வண்டல்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டியலின மாணவர்கள் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த விவகாரம்! விசாரணையில் வெளியான பாலியல் தொல்லை விவகாரம்! என்ன நடந்தது?