பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குனராகப் பணிபுரிந்து வருபவர் திருமால். இவர் கிருத்திகா என்ற மருத்துவருக்கு அடிக்கடி மாற்றுப் பணிகள் வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்துப் பேசுவதற்காக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில், மருத்துவப் பணிகள் இணை இயக்குனரை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மருத்துவர் செந்தில், இணை இயக்குனருக்கு மிரட்டல் அளிக்கும் தொனியில் பேசிய ஆடியோ முன்னதாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இணை இயக்குனர் பொறுப்பிலிருந்தவாறு தனியார் மருத்துவமனையில் சேவைபார்க்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டதுடன், அதனை மறைப்பதற்காகவே இணை இயக்குநர் திருமால் ஆடியோவை திருத்தம் செய்து வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவி சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் பேசியதாக பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குனர் (பொறுப்பு) திருமால் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆடியோ உண்மையானது அல்ல. இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவிக்கிறது. உரையாடலைப் பதிவு செய்து, தான் செய்த தவறுகளை மறைக்க, அதனைத் திருத்தி தனது தேவைக்கேற்ப சமூக வலைதளத்தில் வெளியிட்ட இணை இயக்குனர் திருமாலின் இந்த நடவடிக்கைக்கு சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
திருமால், தான் முறையாக பணிக்கு வராமல் தனது தனியார் மருத்துவமனையில் அரசு விதிகளுக்குப் புறம்பாக பணி நேரத்தில் மருத்துவம் பார்த்த தவறுகளையும் ( இணை இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு விதிகளின்படி தனியார் மருத்துவ சேவை செய்யக்கூடாது) பிற மருத்துவர்கள், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு பலமுறை கூடுதல் பணி, மாற்றுப்பணி அளித்து தொந்தரவு அளித்துவிட்டு, அதை மறைக்கும் பொருட்டும் அலைபேசி உரையாடலை திருத்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் இதனை சட்டப்படி எதிர்கொண்டு உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வித்திடும்” எனத் தெரிவித்துள்ளார்.