சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போதுமான அளவில் அரசு ஊழியர்கள் வரவில்லை.
இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழுவின் மாநில துணை தலைவர் ராஜேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராஜேஷ், “தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் நியாய விலை கடை பணியாளர்கள், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்
பொது விநியோகத் திட்டத்திற்கான தனித் துறையும் பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட 17 விழுக்காடு அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்குவதோடு டாஸ்மாக் நிர்வாகம் நட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளதால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறியதற்கு கண்டனங்களையும் பதிவுச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பயன்பாட்டில் இல்லாத வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம்- சவால் விடும் திமுக எம்.பி.