சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று (ஜூலை.16) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து கரோனா நிவாரணமாக ரூபாய் இரண்டு லட்சம் நிதி வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் பி.டி.அரசகுமார் கூறுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் சார்பாக கரோனா காலத்தில் அயராது உழைக்கும் முதலமைச்சருக்கு பாராட்டுகள்.
பள்ளிகளைத் திறக்க கோரிக்கை
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மற்ற பள்ளிகளில் சேர்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால் மன நோய்க்கு ஆளாகிறார்கள். ஆகையால் படிப்படியாக பகுதி நேரமாக பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண முறைகேடுகளை சீர்செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு 19ஆம் தேதி வெளியாகிறது?