சென்னை: வேளச்சேரியில் உள்ள குருநானக் தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் துணைவியார்களுக்கு தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்தெடுக்கப்பட்ட பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை, தீயணைப்பு துறை போன்ற காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த காவலர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் துணைவியார்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கடந்த மார்ச் 18 மற்றும் 19ல் நடைபெற்றது. அதில் வாரிசுதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் என மொத்தம் 2,541 பேர் கலந்துக் கொண்டனர்.
100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற நிலையில் அதில் 613 பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்(DGP) சைலேந்திரபாபு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர் ஜிவால் ஐபிஎஸ், "வேலை வாய்ப்பு முகாமின் தொடக்கத்தில் சென்னையை சேர்ந்தவர்களே கலந்து கொண்டனர். அதன் பின்பு மற்ற மாவட்டங்களில் இருந்து நிறைய பேர் கலந்துக் கொண்டனர். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. முதலில் சம்பளத்தை எதிர்பார்க்க கூடாது. கம்பெனியை பொறுத்தவரையில் உரிய தொகையை மட்டுமே தருவார்கள். அதன்பின் உங்கள் வேலையில் உள்ள திறமையை பொறுத்தே சம்பளத்தை உயர்த்துவார்கள் என்றார். மேலும், வெளி மாநிலங்களில் வேலை வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக சென்று வேலை பார்க்கலாம். அங்குள்ள கலாச்சாரம் நம்முடைய அறிவு வளர உதவும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குழு அவர்களின் வழிகாட்டுதல் இன்று வெற்றியை தந்துள்ளது" என மேடையில் பேசினார்.
பின்னர் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, "காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு கொடுக்கப்படுவது விரிவு படுத்தப்பட்டு SI, Inspector வரை விடுமுறை கொடுக்கப்படுகிறது. இரவு ரோந்து செய்தெல்லாம் மிக கடினம். தமிழ்நாடு காவல் துறையில் வருடத்திற்கு சராசரியாக 300 காவலர்கள் மரணமடைகிறார்கள். அதில் 50 பேர் வாகன விபத்தால் மரணமடைகிறார்கள். 50 பேர் தற்கொலை செய்கிறார்கள், 200 பேர் உடல் நலக்குறைவால் மரண மடைகிறார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை காவல்துறையில் இறந்து போனவர்களின் வாரிசுகளில் 2,500 பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளோம். அனைவருக்கும் அரசு வேலை கிடைத்து விடாது, நாங்கள் பள்ளியில் படிக்கும் போது அரசு வேலை தான் முக்கியம் என்றனர். தற்போதுள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் இல்லை. பல இடங்களில் வேலை செய்தால் தான் இப்போதெல்லாம் மரியாதை. Google தான் தற்போது பவர். திறன் வளர்க்க வேண்டும் என்ற மனப்பான்மை குறைவாக உள்ளது. அது தான் இந்திய இளைஞர்களின் தற்போதைய பிரச்சனையாக உள்ளது. 1965ல் உலகத்தில் அதிக கடன் வாங்கிய நாடு ஜப்பான். ஆனால் அடுத்த 10 வருடத்தில் வளர்ச்சி அமெரிக்காவை தாண்டியது" என்றார்.
மேலும், வேலை செய்தே செத்தால் ஜப்பானில் தியாகியாக பார்ப்பார்கள். அந்த மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். எனக்கு முதல் மாத சம்பளம் 3,500 ரூபாய் தான், வேலையை செய்வது தான் உண்மையான சம்பளம். உங்களை எடுத்தால் வேலை நடக்கும் என்கிற நிலையை கொண்டு வாருங்கள். அப்போது நீங்கள் நினைத்த சம்பளம் கிடைக்கும். நீங்கள் நல்ல பொறியாளராக இருந்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் நான் வாங்கி தருகிறேன். திறனே இல்லாமல் பி.இ படித்துள்ளேன் எனக் கூறினால் எப்படி கொடுப்பார்கள். அனுபவமே சம்பளமாக கருத வேண்டும். மூளையை பயன்படுத்தி செய்யும் வேலைக்கு தான் இனி வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!