சென்னை: சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள் மற்றும் இன்ன பிற அரசின் முக்கிய செய்திகளை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் பொருட்டு, விளம்பரம் செய்யும் விதமாக 'தண்டோரா' போடும் முறை காலம் காலமாக நடைமுறையில் இருந்த பழக்கம், இன்று வரை நடைமுறைப் படுத்தப்படுகிறது.
அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்தல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மாற்று ஏற்பாடுகளை செய்யும் வண்ணம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்வதை அரசு கூர்ந்தாய்வு செய்து, தமுக்கடிப்பினால் 'தண்டோரா' போடும் நடைமுறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பான அரசின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மாற்றியமைக்க உத்தரவிடப்படுகிறது.
மாற்று ஏற்பாடாக, அரசின் முக்கிய செய்திகளை மிக 2 விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதத்தில், பொருத்தமான வாகனங்களில் (தானிழுவை வாகனம் (Auto Rickshaw), மிதிவண்டி ( Cycle) ) ஒலி பெருக்கிகளை பொருத்தி, தமிழ்நாட்டின் கிராமப் புறங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் விளம்பரம் செய்வதை நடைமுறைப்படுத்தலாம்.
'தண்டோரா' போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், இதனை ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவும் அளவுக்கு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர்கள் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ஈ தொல்லை தாங்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்