தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவை விதி எண் 110இன்கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு எந்தவித வசதியும் வழங்கப்படாத நிலையில் மூன்று லட்சத்து நான்காயிரத்து 269 அகதிகள் 18 ஆயிரத்து 944 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள இருபத்து ஒன்பது மாவட்டங்களில் 108 முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளைச் சரிசெய்ய ரூ.231 கோடி ஒதுக்கீடு
இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பான மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அமைக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாமில் பழுதடைந்த வீடுகளைச் சரி செய்ய 231 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் 7,469 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3,510 வீடுகளை நடப்பாண்டில் கட்டுவதற்காக 108 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்படும்
ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய்
கழிப்பிட வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.
மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும். வேளாண்மை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பில் மதிப்பெண் அடிப்படையில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.
முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாமில் உள்ள 250 மாணவர்கள் அரசு, தனியார் கலைக் கல்லூரிகளில் தொழிற்கல்வி படித்துவருகின்றனர். அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை குறைவாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை 2,500 ரூபாயிலிருந்து 10,000 ஆக அதிகரிக்கப்படும். கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் பெரும் கல்வி உதவித்தொகை மூன்றாயிரத்திலிருந்து 12 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
விலையில்லா எரிவாயு அடுப்பு, அரிசி
தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு எரிவாயு சிலிண்டருடன்கூடிய அடுப்பு இலவசமாக வழங்கப்படும். ஐந்து எரிவாயு சிலிண்டர்களுக்கு தலா 400 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுவந்த 20 கிலோ அரிசி தற்போது விலை ரத்துசெய்யப்பட்டு விலையில்லா அரிசி வழங்கப்படும்.
317 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திலிருந்து குடும்பத்திற்கு ஆண்டுதோறும் வழங்கக்கூடிய துணிகளின் மதிப்பு 1,790 ரூபாயிலிருந்து 3,473 ஆக உயர்த்தி வழங்கப்படும். குடும்பங்களுக்கு எட்டு வகையான சமையல் பாத்திரங்கள் 1,296 ரூபாய் மதிப்பீட்டில் சேலம் உருக்கு ஆலையில் தயாரிக்கப்படும் பாத்திரங்கள் வழங்கப்படும்
வீடு, இதர உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாயும், கல்வி, வேலைவாய்ப்பை உறுதிசெய்ய 12 கோடியே 25 லட்ச ரூபாயும், மேம்பட்ட வாழ்க்கைத் திறனை மேம்படுத்த 45 கோடியே 61 லட்ச ரூபாயும் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி கடல் கடந்து வாழும் தமிழர்களைக் காக்கக்கூடிய அரசுதான் இந்த அரசு" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்: பருவநிலை மாற்றம் குறித்து புத்தகம் எழுதிய 10 வயது சிறுவன்!