சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கோவில் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,2020ஆம் ஆண்டு ஜூலை முதல், மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கணக்கிட்டு ஒரு மாதத்தில் கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், வாடகை பாக்கியை கோவில் நிர்வாகத்துக்கு வழங்கவும், கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், குத்தகை பாக்கி 74 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை கோவில் நிர்வாக கணக்கில் வைப்பு செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஏற்கனவே அளித்த உத்தரவாதத்தின்படி கோவில் சீரமைப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கோவில் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதால், ஏற்கனவே உத்திரவாதம் அளித்தபடி 2 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைக்கப்படும் என தலைமை வழக்கறிஞர் பதிலளித்த நிலையில், சீரமைப்பு பணிகள் எப்போது துவங்கப்படும்? என விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட 2 காவலர்கள்; வீடியோ வைரலானதால் நடவடிக்கை!