சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று மாபெரும் கொண்டாட்டத்தை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவரது பிறந்தநாளன்று நடைபெறும் நிகழ்ச்சிகளின் நிரலை அதிமுக வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி கட்சித் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து இருவரும் அதிமுக கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குவர்.
இதையடுத்து, நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.
கரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு தொண்டர்கள் உதவ வேண்டும், கட்சி நிர்வாகிகள் ரத்த தானம், மருத்துவ முகாம், கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும், அன்னதானம், இலவச திருமணம், வேட்டி-சேலை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.