சென்னை: நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் மணமக்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜி-20 மாநாட்டை ஒட்டி குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில், நேற்று டெல்லி சென்றுவிட்டேன். இந்த செய்தியை சபா.ராசேந்திரனுக்கு நான் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அவரும் என்னுடைய நிலைமையைப் புரிந்து கொண்டு, ”நீங்க போய்விட்டு வாங்க அண்ணா” என்று பாசத்தோடு சொன்னார்.
டெல்லியில் இருந்தாலும், என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நெய்வேலியில் தான் இருக்கிறது. சபா.ராசேந்திரன் குடும்பம் வாழையடி வாழையாக கழகக் குடும்பமாக இருந்து வருகின்ற குடும்பம். இனியும் அப்படித்தான் தொடரப் போகிறது. நமது சபா.ராசேந்திரனின் தந்தை சபாபதி மூன்று முறை சொரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
மேலும், 1996ம் ஆண்டு சொரத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர், 2003ம் ஆண்டு பண்ருட்டி ஒன்றியக் கழகச் செயலாளர், 2006ம் ஆண்டு நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்தவர். நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை வென்றவர்.
தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டுப்பெறுவதில், சபா.ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையத்தை நான் துணை முதலமைச்சராக இருந்தபோது நேரில் வந்து திறந்து வைத்தேன். அதுமட்டுமல்ல, தனது சொந்த நிதியில், காசாம்பு ஏரியை தூர்வாரினார். அதை நேரில் சென்று நான் பார்வையிட்டது இப்போதும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
இப்போது 2021ல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, காடாம்புலியூர் சிட்கோ சிறுதொழில் வளாகம் கட்டப்பட்டு, மூன்று மாதத்திற்கு முன்பு தான் திறந்து வைத்தேன். நெய்வேலியில் நகர்ப்புற திட்டத்தின் கீழ் 840 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான திட்டங்களை தன்னுடைய தொகுதிக்கு கொண்டு வர வேண்டும், மக்கள் தேவைகளை தீர்க்க வேண்டும் என்று முனைப்பாக இருக்ககூடியவர் ராசேந்திரன்.
நெய்வேலி நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முடிப்பவராக செயல்பட்டு வருகிறார். பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் இரண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் எனவும், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன்.
நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கிய பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற முழக்கத்துடன் விடை பெறுகிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐநா சீர்திருத்தங்களுக்கு ஒரு புதிய உத்வேகம் - பிரதமர் மோடி