தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். என்பிஆர் தொடர்பாக தமிழ்நாடு அரசு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துவிட்டதா? என்றும் அவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றினால் அது சட்டத்தைக் கட்டுப்படுத்தாது. மேலும் அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக பொய்யான தீர்மானம் நிறைவேற்றி, மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை" என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் அளித்த இந்தப் பதிலில் திருப்தியளிக்காததால், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களும், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், தமிமுன் அன்சாரி, அபுபக்கர் உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என, ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது என்பிஆருக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் சர்ச்சைக்குரிய 6 கேள்விகளை நீக்கவில்லை' - தமிமுன் அன்சாரி