சென்னை: பா.ஜ.க - அதிமுக கூட்டணி முறிவை அதிமுக அறிவித்தது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லியில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துகள் வெளியில் பரவத் தொடங்கியது. குறிப்பாக, அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவினரைக் கோபப்படுத்தும் விதமாகவும், பொது வெளியில் பேசி வருவதாகவும், அதிமுகவின் மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதன் காரணமாகத்தான் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது என பல்வேறு தகவல்கள் பரவியது. இது குறித்து பா.ஜ.கவின் தேசியத் தலைவர்கள் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்பதற்காகத்தான் இந்த சந்திப்பு எனத் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், அண்ணாமலை எந்தவித சலசலப்பும் இல்லாமல் சென்னை வந்தடைந்தார். மேலும், அண்ணாமலை தலைமையில் சென்னையில் பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற தொடங்கியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகளுடன் நடத்தும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து கேட்கும் அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பணிகள் குறித்தும், மாவட்டத் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளை அவர்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஏற்கனவே பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களைச் சந்திக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் நேரம் கேட்டுள்ளார்கள் எனக் கூறப்படும் நிலையில், கூட்டணியில் வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார், யாரெல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்? பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாவட்டத் தலைவர்கள் 66 பேரும், மாநில நிர்வாகிகள் 65 பேரும், மாநில அணி பிரிவு 38 பேரும், மாவட்டப் பார்வையாளர்கள் 41 நபர்கள் உள்பட மொத்தம் 221 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஏன் இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம்? இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி கூறியதாவது, “அண்ணாமலை மீது பல விமர்சனங்கள் வந்தாலும், பா.ஜ.கவின் மேலிடத்திற்கு தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக அவர் செயல்பட்டு வருகிறார். மேலும், அண்ணாமலை தற்போது மேற்கொண்டு வரும் "என் மண் என் மக்கள்" யாத்திரையும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
மேலும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், அண்ணாமலை பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
பா.ஜ.கவின் மேலிடத்திற்கு தனது பலத்தை நிரூபித்த அண்ணாமலை, பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான பணிகளை அடுத்தகட்டமாகத் தொடங்குவார். அதற்கான ஒரு முன்னேற்பாடாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது” என்கிறார். ஒருவேளை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் மோடிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால், பா.ஜ.க தலைமையில் அமையும் கூட்டணியில் இணைந்தால் அதில் ஆச்சரியம் இல்லை எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: இன்றைய பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் - கரு.நாகராஜன்