மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. மறைந்த முன்னாள், இந்நாள் பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டத்தொடரின் முதல் நாள் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், ஜூலை 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கு முன்னதாக கூட்டத்தொடரை முடிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூலை 19ஆம் தேதிக்குள் கூட்டத்தொடரை முடிக்க இருப்பதாகவும், அதுவரையில் தினமும் இரவு 8 மணி வரை அவையை நடத்தி குறைக்கப்படும் நாட்களை ஈடு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.