சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்களும் அவரது ரசிகர்களும் கண்ணீருடன் இன்று (டிச.29) அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக நிறுவனத் தலைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயகாந்த், நுரையீரல் அழற்சி மற்றும் கரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, விஜயகாந்த்தின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு, அங்கிருந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்தின் ரசிகர்களும், பொதுமக்களும் கோயம்பேடு பகுதியில் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.29) மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. எனவே, இன்று காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணிவரை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, சென்னை தீவுத்திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
எனவே, கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி சாலை மார்க்கமாக, ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தீவுத்திடலில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை தீவுத்திடலில் மூவாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த வருவதால், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து மதியம் 1:00 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இதையும் படிங்க: 'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - ரஜினிகாந்த் விஜயகாந்த் குறித்து உருக்கம்