சென்னை: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 5க்கு இன்று (ஜூன் 30) வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவரைப் பிடித்து, அவர் வைத்திருந்த பையை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர். அப்போது, அந்தப் பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், பிடிபட்ட நபரை ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (53) என்பது தெரிய வந்தது. கருவாடு வியாபாரியான இவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது, அதில் 78 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்தின் அடிப்படையில், வருமான வரித்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பிடிபட்ட நபரையும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கெனவே இந்த மாதத்தில் மட்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணமாக ரூ.2,64,19,500 மற்றும் 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கமும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 90 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப்படை டிஎஸ்பி ராஜு கூறுகையில், “தொழில் ரீதியாக பணம் கொண்டு வருபவர்கள் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாத பணம், எவ்வளவு மதிப்பாக இருந்தாலும் அது ஹவாலா பணம் என்ற அடிப்படையிலேயே கருதப்படும். மேலும் அவை பறிமுதல் செய்யப்படும். பின்னர் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆண்டிபட்டி வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!