சென்னை: சென்னை விமான நிலையத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன், "அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அது மட்டுமல்லாமல் அது தொடர்பாக விமர்சனமும் செய்து உள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கக் கூடிய மிகவும் உயர்ந்த பொறுப்பில் இருக்கக் கூடிய ஆளுநர், ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போல் திரும்ப திரும்ப செயல்பட்டு வருகிறார்.
அவரது அணுகுமுறை அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான அவரது போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் அலுவலகம் போன்று இயங்கி கொண்டு இருக்கிறது. சனாதன சக்திகள், சங்பரிவார் அமைப்புகள் நாள்தோறும் குவியும் இடமாக ஆளுநர் மாளிகையை மாற்றி இருக்கிறார் நமது ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்; மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி!
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆளாத மாநிலங்களில் நெருக்கடி தருவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது தமிழ்நாடு என பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யக் கூடிய மாநில அரசுகளை அச்சுறுத்தக் கூடிய வகையில் மத்திய அரசின் போக்கு அமைந்து உள்ளது.
தற்போது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை என்பது, செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டு உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கை என்பதை விட, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைத்து உள்ள செக் மேட் (Check mate) என்றுதான் சொல்லப்படுகிறது. முதலமைச்சருக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறார்கள். இதை ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்" என கூறினார்.
முன்னதாக, செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகிய இருவருக்கும் அளிக்கவும், அதேநேரம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாமல் அமைச்சராக தொடர்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு இருந்தது.
இதில் செந்தில் பாலாஜி குற்றவியல் வழக்கில் உள்ளதால், அவர் மட்டும் இலாகாவை தொடர அனுமதிக்க முடியாது என ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து வழங்கி நேற்று (ஜூன் 16) தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத் தொடரவும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு மீண்டும் வருமான வரித்துறையினர் சம்மன்!